Sunday, March 30, 2014

பெர்ஸனாலிடியை வளர்த்துக்கொள்வது எப்படி? பகுதி 1: வலிமையைப் பற்றி


மாணவர் உலகம் என்ற மாதப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட நான் எழுதிய கட்டுரைத் தொடரின் முதல் பகுதி


நமது அறிமுகப் பகுதியில் பெர்ஸனாலிடியை தீர்மானிப்பவை எவை என்பதில், நமது உடல் மற்றும் மன வலிமை முதலாவதாக வருவதாகப் பார்த்தோம். இந்தப் பகுதியில் இதைப் பற்றி மேலும் சிறிது ஆராய்ந்து பார்க்கலாம்.

“ஒடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா” - பாரதியார்

சில கசப்பான உண்மைகளை நாம் ஒத்துக்கொண்டே ஆக வேண்டும். இன்றைக்கு பல சிறுவர்களுக்கு சிறு வயதிலிருந்தே பலவிதமான வியாதிகள் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அஜீரணம், தலைவலி, பல்வலி, மூச்சு முட்டல், பார்வைக் கோளாறு, இருதயக் கோளாறு, சர்க்கரை நோய், உடல் களைப்பு, தூக்கமின்மை போன்ற பல உடல்நலக் கோளாறுகள் தங்கள் குழந்தைகளுக்கு இருப்பதாக பல பெற்றோர்கள் குறைபட்டுக்கொள்கிறார்கள். இது போதாதென்று, சிறுவர்களுக்கு இன்றைக்கு இருக்கிற மன அழுத்தங்கள் (MENTAL PRESSURES) சொல்லி மாளாது. நான்கு ஐந்து வயதிலிருந்தே தினம் தினம் போட்டிகளை (COMPETITION) சந்திக்க வேண்டிய சூழ்நிலை. மதிப்பெண்கள் வாங்குவதிலிருந்து தொடங்கி எதெற்கெடுத்தாலும் ஒரு போட்டி, சிறு வயதிலிருந்தே போட்டியில் எப்படியும் தங்கள் குழந்தைகள் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்கிற ஒரு வெறித்தத்தனத்தோடு பல பெற்றோர்கள் தவிக்கிறார்கள். வெற்றி பெற முடியாத பல குழந்தைகள் ‘இது நம்மால் ஆகாது’ என்கிற ஒரு தோல்வி, தாழ்வு மனப்பான்மையோடேயே வளர்கிறார்கள். எதெற்கெடுத்தாலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். இது இந்த சமுதாயத்தின் ஒரு மிகப் பெரிய வியாதி.

இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னால், எங்கள் தெருவில் வசிக்கும் ஒரு பெண்மணி என்னிடம் வந்து தன்னுடைய பெண்ணுக்கு மாலை நேரம் டியூஷன் எடுக்க முடியுமா என்று கேட்டாள். அதற்கு அவர்கள் கூறிய காரணம், தன் பெண் இரண்டாம் ரேங்கிலிருந்து மூன்றாம் ரேங்கிற்கு கீழிறங்கிப்போய் விட்டாளாம். ‘உங்கள் பெண் எந்த வகுப்பில் படிக்கிறாள்’ என்று கேட்டதற்கு முதல் வகுப்பு என்று பதில் கூறினாள். எனக்கு சிரிப்பாக இருந்தது. கோபமும் வந்தது. ‘என்னம்மா, முதல் வகுப்புக்கு என்ன ரேங்க் வேண்டிக்கிடக்கிறது? உங்கள் பெண்ணை மாலை நேரம் நன்றாக தெருவில் ஓடியாடி விளையாடச் சொல்லுங்கள். அதைத்தான் நான் என் சிறு வயதில் செய்திருக்கிறேன். நான் இன்று நன்றாக இல்லையா? இந்த வயதில், கிடைக்கிற சிறு நேரத்திலும் டியூஷன் வகுப்புகளுக்கு அனுப்பி அந்த குழந்தையின் பொன்னான பருவத்தை வீணடிக்காதீர்கள், என்று சொல்லி அனுப்பிவைத்தேன். இப்படி இருக்கிறது நமது சிறு குழந்தைகளின் கதை.

இன்று நமது சிறுவர்களுக்கு இருக்கும் பல அழுத்தங்களுக்கு பெற்றோர்களே காரணம் என்றுதான் கூறவேண்டும். இப்படி நான் சொல்வதற்காக பெற்றோர்கள் என்மீது கோபப்படலாம். தங்கள் குழந்தைகள் நன்றாக படிக்கவேண்டும் என்று பெற்றோர்கள் ஆதங்கப்படுவதை, ஆசைப்படுவதை யாரும் குறைகூற முடியாதுதான். ரேங்க் என்பது ஒருவரை அங்கீகரிப்பதற்கும், ஊக்குவிப்பதற்கும் ஏற்படுத்தப்பட்ட ஒரு கருவி என்றுதான் நான் நம்புகிறேன். வெறும் போட்டி மனப்பான்மையை வளர்ப்பதற்காக அல்ல. இன்று பெரும்பாலான மாணவர்களுக்கு, மாலை நேர விளையாட்டு என்பது என்னவென்றே தெரியாமல் போய்விட்டது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் கம்ப்யூட்டர் விளையாட்டும், வீடியோ விளையாட்டும்தான். வெகு சீக்கிரம் விரல்கள் உணர்ச்சியற்றுப்போய்  அவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி வந்துவிடும். முக்கியமாக, பெண் குழந்தைகளுக்கு விளையாட்டு என்பதே இல்லை. பழைய காலங்களில் வீட்டு வேலைகளையாவது பெண் குழந்தைகள் செய்துகொண்டிருந்தார்கள். இன்று அதுவும் இல்லை. அவர்கள் படிப்பு கெட்டுப்போய்விடும் என்று சொல்லி அவர்களிடம் பெற்றோர்கள் வீட்டு வேலை வாங்குவதேயில்லை. அரசாங்கமே மிக்சி, கிரைண்டர் எல்லாம் இலவசமாக கொடுத்துவிடுகிறது. உடல் தேய்ந்து உரல், ஆட்டுக்கல்லை பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விட்டது. இடுப்பு வலிக்க தண்ணீர் குடம் சுமக்க வேண்டியதில்லை. வெகு சாதாரணமான ஸ்கிப்பிங் கயிறுகூட காணாமல் போய்விட்டது. ஆனால், பல குழந்தைகளிடமும் செல் ஃபோன் மட்டும் இருக்கிறது.

பல குழந்தைகளுக்கு, வசதியிருந்தும்கூட, சத்துள்ள உணவு கிடைப்பதில்லை. தொலைக்காட்சியில் வரும் பல விளம்பரங்களே நமது குழந்தைகளைக் கெடுக்க போதுமானது. எப்போதோ, தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம் பார்த்த ஞாபகம். ஒரு சிறு குடும்பத்தில் அம்மா பல சுவையான, வண்ண வண்ண உணவு வகைகளை தயாரித்து சாப்பாட்டு மேஜையில் வைக்கிறாள். சாப்பிட உட்கார்ந்திருக்கும் எல்லோருக்கும் மகிழ்ச்சி, ஒரு சிறு பெண்ணைத் தவிர. அந்தப் பெண் மிகச் சோர்வாக, வருத்தமாகக் காணப்படுகிறாள். உடனே, அந்த அம்மாவுக்கு புரிந்து விடுகிறது. ‘உனக்கு என்ன வேண்டும் என்று எனக்குத் தெரியும்’ என்று சொல்லி ஒரு சிறிய தட்டில் ஒரு பிரபலமான கம்பெனி தயாரிப்பில் வந்த ஒரு சாக்கலேட் கட்டியை கொண்டுவந்து வைக்கிறாள். உடனே அந்த சிறிய பெண்ணின் முகம் மிக பிரகாசமாகிறது. விளம்பரக்காரர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.

ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியின் முதல்வர், ‘பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல சத்துள்ள காய்கறிகள், பழங்கள், உணவுகளை மதிய உணவுக்கு கொடுத்தனுப்புவது இல்லை’ என்று  என்னிடம் குறை கூறிக்கொண்டிருந்தார். என்ன செய்வது, சத்தில்லாத, விளம்பரபடுத்தப்படும் சில உணவுகளையே பல சிறுவர்கள் விரும்புவதாக பெற்றோர்களும் குறைபட்டுக் கொள்கிறார்கள். இயற்கையாக கிடைக்கக்கூடிய பல சத்துள்ள உணவு வகைகளை குழந்தைகள் தொடுவதேயில்லை.

பல வியாதிகளுக்கு, நமது சுற்றுப்புற சூழ்நிலையே காரணமாக அமைந்துவிடுகிறது. அதைக் கட்டுப்படுத்தக்கூடிய வலிமை நம்மிடம் இல்லைதான். குறைந்தபட்சம், நமது கட்டுக்குள் இருப்பதையாவது நாம் சரி செய்யலாமே.

விளையாட்டு, உடற்பயிற்ச்சி, சரியான நேரத்தில் சத்தான உணவு இவைதான் நமது உடல் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கின்றன. உடல் ஆரோக்கியம் நமது அடிப்படை பெர்ஸனாலிடியை தீர்மானிக்கிறது. உடலில் வலிமை இல்லை என்றால், மனதும் சோர்ந்துபோயிருக்கும். சோர்ந்து போயிருப்பவரின் மனப்பான்மையும் அப்படியே சோர்ந்தே இருக்கும். இதை தினப்படி நீங்களே உங்கள் மத்தியில் உள்ள பல மாணவர்களிடம் காணலாம்.

அதனால், மாணவர்களே, உங்கள் பெர்ஸனாலிடியை வளர்த்துக்கொள்ள நீங்கள் முதலில் என்ன செய்ய வேண்டும்?

1.                                 நல்ல பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.2    
  .   
த          தினமும் உடற்பயிற்ச்சி, உடலை வருத்தி விளையாடும் விளையாட்டுக்கள், யோகா, மூச்சுப் பயிற்ச்சி முதலியவற்றை கடைபிடியுங்கள். மாலை நேரத்தில் வெட்டவெளியில் விளையாடுவது மிகவும் முக்கியமானது. உடலுக்கு தேவையான மிக முக்கியமான வைட்டமின் டீ சூரியவெளிச்சத்தில் இலவசமாக கிடைக்கின்றது. நன்றாக உடற்பயிற்ச்சி செய்யும்பொழுது உணவை ஜீரணம் செய்யும் உடம்பின் பகுதிகள் நன்றாக வேலை செய்யும். நுரையீரல், இருதயம் நன்றாக வேலை செய்து ரத்த ஓட்டம் சீராகும். நன்றாக பசியெடுக்கும். எலும்பு, நரம்பு பலமடையும்.  நன்றாக தூக்கம் வரும். இப்படி பல நன்மைகள் இருக்கின்றன.
3.   நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள். சரியான நேரத்தில் சாப்பிடுங்கள். சரியான அளவு சாப்பிடுங்கள். விளம்பரப்படுத்தும் பல சத்தில்லாத உணவு வகைகளை சாப்பிடுவதை, தவிர்க்க முடியாவிட்டால், குறைந்தபட்சம் குறைத்துக்கொள்ளுங்கள்.
4.  
          தொலைக்காட்சி பார்ப்பது, வீடியோ கம்ப்யூட்டர் விளையாட்டுக்களை விளையாடுவது போன்றவை உங்களது மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவாது. கண்டிப்பாக தூங்கப்போவதற்கு முன்பு தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்க்கவும். தவிர்க்க முடியாவிட்டாலும் குறைத்துக்கொள்ளுங்கள்.
5.   
           பெற்றோர்களே, உங்களுக்கு ஒரு முக்கியமான வேண்டுகோள். பெரும்பாலும், நீங்கள் எல்லோரும் கடுமையாக குடும்பத்திற்காக, முக்கியமாக உங்கள் குழந்தைகளுக்காக, உழைக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஊடவே, உங்கள் குழந்தைகளுடன் உங்கள் தரமான நேரத்தை (QUALITY TIME) ஒதுக்குங்கள். மிக அதிகமான எதிர்பார்ப்புகளை உங்கள் குழந்தைகளின் மீது திணிக்காதீர்கள். இது அவர்களின் மன அழுத்தத்தைக் கூட்டும். பல வியாதிகளுக்கு காரணமாகும். சிறுவர்கள் மிகவும் மென்மையானவர்கள், வளைந்து கொடுப்பவர்கள், பலவீனமானவர்களும் கூட. அவர்களை உருவாக்குவதில் உங்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உண்டு என்பது உங்களுக்கே தெரியும். உங்களுடைய சொந்த பிரச்சினைகளுக்காக இந்தப் பொறுப்பை மறந்து விடாதீர்கள். அவர்கள் எதை செய்யக்கூடாது என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அதை நீங்களும் செய்யாதிருப்பது உங்கள் குழந்தைகளுக்கு நல்லது. நீங்கள் அவர்களுக்கு ஒரு முன்னோடி. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதையும் உங்கள் குழந்தைகள் மிகக் கூர்மையாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மனதில் கொள்ளவும். முக்கியமாக மற்ற குழந்தைகளுடன் உங்கள் குழந்தைகளை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள், பேசாதீர்கள். ஒவ்வொரு குழந்தையும் ஒரு தனித்தன்மை வாய்ந்த குழந்தை என்பதை மறந்து விடாதீர்கள்.

     என்னடா, வலிமையைப் பற்றி பேசும் பொழுது உடல் வலிமையைப் பற்றி மட்டுமே இவர் சொல்லியிருக்கிறாரே, மன வலிமையைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே என்று நினைக்கிறீர்களா? ஆம். காரணமாகத்தான். உடல் வலிமைதான் ஆதாரம். உடல் வலிமையில்லாமல் மன வலிமை என்பது மிக அரிது. மனதில் தோன்றும் பல பிரச்சினைகளுக்கு உடல் உபாதையே காரணம். தைரியம், தன்னம்பிக்கை, கொள்கையில் உறுதி, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொள்ளல் போன்ற மனவலிமைக்கு அடையாளங்கள் நமது பெர்ஸனாலிடியின் பிரதிபலிப்புகள். வரும் பகுதிகளில் அவற்றைப் பற்றியும் பேசுவோம்.

        ஒன்றை மட்டும் நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். உடம்பு, மனது இரண்டும் வலிமையாக இருக்க வேண்டும். மனது தளர்ந்தால் அது உடல் உபாதையாக மாறும். உடம்பு தளர்ந்தால் அதுவும் மனோவியாதியில் கொண்டு சேர்க்கும். உடம்புக்கு எவ்வளவு ஆரோக்கியமான பயிற்சிகள் தேவையோ, அவ்வளவு மனதுக்கும் தேவை.
-    தொடரும்


Wednesday, March 26, 2014

பெர்ஸனாலிடியை வளர்த்துக் கொள்வது எப்படி?

மாணவர் உலகம் என்கிற தமிழ் பத்திரிகையில் வெளியிடப்பட்ட நான் எழுதிய கட்டுரைத் தொடர்.

அறிமுகம்

மாணவர்களே, இன்று நாம் இருப்பது வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்ற போட்டி நிறைந்த ஒரு உலகம். வாழ்க்கையில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்று நாம் எல்லோருமே துடித்துக் கொண்டிருக்கிறோம். வாழ்க்கையில் வெற்றியடைய என்ன செய்யவேண்டும்? தேர்வில் நிறைய மதிப்பெண்கள் மட்டும் வாங்கிவிட்டால் போதுமா? அறிவும் திறமையும் மட்டும் போதுமா? போதாது என்பதே இன்றைய நிலைமை. அறிவும் திறமையும் எவ்வளவு முக்கியமோ அதற்கு ஈடாகவும், - இல்லை, இல்லை - அதற்கு ஒரு படி மேலாகவும் நமக்கு வேண்டியது சரியான மனப்பான்மை. (ATTITUDE) நல்ல ஒரு பெர்ஸனாலிடி (PERSONALITY). திடமான தன்னம்பிக்கை (SELF CONFIDENCE). சுய ஊக்கம் (SELF INITIATIVE) மற்றும் சுய தூண்டுதல் (SELF MOTIVATION) ஆகும். நான், கடந்த ஆறு வருடங்களாக பல பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பெர்ஸனாலிடியை வளர்த்துக்கொள்வது பற்றி வகுப்புகள் நடத்தி வந்திருக்கிறேன். பல மாணவர்களுடனும், ஆசிரியர்களுடனும், முதல்வர்களுடனும் மற்றும் பெற்றோர்களுடனும் கலந்துரையாடியிருக்கிறேன்.  நான் இனி எழுதப்போவது, பெர்ஸனாலிடியை வளர்த்துக்கொள்வது பற்றி என் அனுபவத்தில் உணர்ந்ததும், பார்த்ததும், கேட்டதும், படித்ததும்தான்.
-    டீ.என்.நீலகண்டன்

டீ.என்.நீலகண்டன் வேதியியலில் ஒரு முது நிலை பட்டதாரி. நிதி, பொருளாதாரம், வங்கி, முதலீடு, ஆயுள் காப்பீடு, மனிதவள மேம்பாடு இவற்றில் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உயர் பதவியில் 35 வருடங்கள் அனுபவம் பெற்றவர். வேலையிலிருந்து ஓய்வு பெற்று, தற்போது இளைஞர்களின் மேம்பாட்டுக்காக ஒரு அறக்கட்டளையை திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசியில் நிறுவி  நடத்தி வருகிறார். பல பள்ளிகளில், கல்லூரிகளில் PERSONALITY DEVELOPMENT, MOTIVATION, COMMUNICATION SKILLS, SPOKEN ENGLISH, QUIZ & GENERAL KNOWLEDGE வகுப்புகள் நடத்தி வருகிறார். இவர் தனது நேரத்தை இந்தியாவிலும் வட அமெரிக்காவிலுமாக கழித்துக்கொண்டிருக்கிறார். இவரை neelkant16@yahoo.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

இனி மேலே படிக்கலாம்…….

அறிவும் திறமையும் மட்டுமே உங்களுடைய வெற்றியைத் தீர்மானிக்க முடியுமா?
“சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா” – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

இன்றைக்கு, பெரும்பாலான, படித்த, பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு, அவர்கள் படித்த படிப்பிற்கு ஏற்ப நல்ல வேலை கிடைப்பதில்லை என்பது நிதர்சனமான உண்மை. நிறைய செலவு செய்து நான்கு ஆண்டுகள் இன்ஜினியரிங் படிப்பு முடித்த மாணவர்கள், அல்லது இரண்டு ஆண்டுகள் மேனேஜ்மண்ட் படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் வேலைக்காக அலைவதைப் பார்க்கும்பொழுது மிகவும் வருத்தமாக இருக்கிறது. வேலை கிடைக்காமல் வாழ்க்கையையே ஒரு தோல்வியாக பலர் நினைப்பதற்கு காரணங்கள் பல உண்டென்றாலும், படிக்கின்ற காலங்களில் தன்னை வளர்த்துக் கொள்வது பற்றிய ஒருவரின் மெத்தனப்போக்கு ஒரு மிகமிக முக்கியமாக காரணமாகும்.

இந்திய நாட்டின் 2011ம் ஆண்டின் ஜனத்தொகை கணக்குப் படி 14 வயதிற்குட்பட்ட மக்களின் எண்ணிக்கை 29.5 சதவிகிதம் என்று அறிகிறேன். இதில் ஆண்கள் 30 சதவிகிதம், பெண்கள் 28.8 சதவிகிதம். அதாவது இன்னும் ஒரு பத்து அல்லது இருபது ஆண்டுகளில் இந்த முப்பது சதவிகித சிறுவர்கள், படித்த, பட்டம் பெற்ற இளய-முதியவர்களாக வாழ்க்கையின் முதல் படிக்கட்டில் நின்றுகொண்டிருப்பார்கள்.
மேலும் சற்று யோசித்துப் பார்த்தால், வரக்கூடிய பத்து அல்லது இருபது ஆண்டுகளில் இந்த முப்பது சதவிகித சிறுவர்களுக்கு ஒரு சரியான வழிகாட்டுதல் கிடைக்கவில்லையென்றால், அல்லது அவர்கள் நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்ளவில்லை என்றால், எதிர்காலத்தைப் பற்றிய ஒரு சரியான சிந்தனையின்றி வளர்ந்தால், துணிவு, தன்னடக்கம், தன்னம்பிக்கை, தன்னைப்பற்றிய ஒரு நல்ல அபிப்பிராயம் போன்ற நல்ல மனப்பான்மைகளை வளர்த்துக்கொள்ளவில்லை  என்றால், இவர்கள் படித்த, பட்டம் பெற்ற இள-முதியவர்களாக, சரியான வேலயின்றி, தாழ்வு மனப்பான்மையோடு, கட்டுப்பாடு இல்லாமல் வெறுத்துப்போய் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருப்பார்கள். அப்பொழுது நமது நாட்டின் கதி எப்படி இருக்கும்? ஒவ்வொரு மாநிலமும் புரட்சி வெடிக்கும் ஒரு பூமியாக அன்றோ இருக்கும்.

அதே சமயம், இதே முப்பது சதவிகித சிறுவர்கள் நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொண்டு, நல்ல ஒரு மனப்பான்மையை வளர்த்துக்கொண்டு, எதிர்காலத்தைப் பற்றிய ஒரு திடமான கனவோடு வளர்ந்தால் நமது இளைய இந்தியா உலகுக்கே தலைமை தாங்கி நடத்த முடியாதா? இந்த உலகத்தையே நம்மால் வெல்ல முடியாதா?

மாணவர்களே, நன்றாக யோசித்துப் பாருங்கள். நீங்கள் இப்பொழுது ஒரு முக்கியமான காலக்கட்டத்தில் இருக்கிறீர்கள்.

வரக்கூடிய பத்து இருபது ஆண்டுகளில் நீங்கள் உங்களை எப்படி கட்டிக் காத்துக்கொள்ளப் போகிறீர்கள், எப்படி உங்களை வளர்த்துக்கொள்ள போகிறீர்கள் என்பது இன்று ஒரு முக்கியமான விஷயம். இன்று நீங்கள் எடுக்கக் கூடிய முடிவு உங்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகிறது. பாடங்களை மனப்பாடம் செய்து நிறைய மதிப்பெண்கள் மட்டும் வாங்கிவிட்டால் போதுமா? எதிர்காலத்தைப் பற்றிய ஒரு திடமான சிந்தனை, அறிவு, எதிர்பார்ப்பு, மற்றும் கனவுடன் ஒரு செயல்வீரராக விளங்க வேண்டாமா? என்ன செய்யப்போகிறீர்கள்? மிக முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய தருணம் இது.

அறிவும் திறமையும் எவ்வளவு முக்கியமோ அதற்கு ஈடாகவும், - இல்லை, இல்லை - அதற்கு ஒரு படி மேலாகவும் நமக்கு வேண்டியது சரியான மனப்பான்மை. (ATTITUDE) நல்ல ஒரு பெர்ஸனாலிடி (PERSONALITY). திடமான தன்னம்பிக்கை (SELF CONFIDENCE). சுய ஊக்கம் (SELF INITIATIVE) மற்றும் சுய தூண்டுதல் (SELF MOTIVATION) ஆகும்.

இன்றைக்கு, படிக்கின்ற மாணவர்களின் வளமான எதிர்காலத்திற்கு, அவர்களது மனப்பான்மையை வளர்த்துக்கொள்வதே முக்கியமான தீர்வாகும்.

கை நிறைய சம்பளம் கொடுக்கும் பெரிய நிறுவனங்கள் இன்று மாணவர்களிடையே எதைப் பெரியதாக எதிர்பார்க்கிறார்கள்? இல்லை, யாருக்கும் கைகட்டி நிற்கப் போவதில்லையென்று, சுயமாக ஏதேனும் ஒரு தொழில் செய்ய விரும்புகிறீர்களா, அப்படி ஒரு தொழிலை வெற்றிகரமாக நடத்திச்செல்வதற்கு அடிப்படையாக என்னென்ன தேவை? 
      
    * மனப்பான்மை (ATTITUDE)
·          *    கருத்தை எடுத்துச் சொல்லும் திறன் (COMMUNICATION SKILLS)
·          *   மற்றவர்களுடன் பழகி உறவு கொள்ளும் முறை (INTER PERSONAL RELATIONSHIP)
·     * ஒரு அணியில் உறுப்பினராகவும் இருந்துகொண்டு மற்றவர்களையும் வழி நடத்தும் திறமை (TO BE A     MEMBER OF A TEAM AND ALSO BE A LEADER – LEADERSHIP QUALITIES)
·        *   பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் தன்மை (PROBLEM SOLVING SKILLS)
·   * எதிர்காலத்தைப் பற்றிய எண்ணம், குறிக்கோள், தீர்மானம், தன்னம்பிக்கை, தொலை நோக்குப் பார்வை (GOALS AND OBJECTIVES, DETERMINATION, VISION, SELF-CONFIDENCE)
·       *  தன்னைப் பற்றிய ஒரு அறிவு (AWARENESS ABOUT ONE’S STRENGTHS, WEAKNESSES, OPPORTUNITIES AND THREATS)
·        * சுய மரியாதை (SELF-ESTEEM)
·       *  உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் திறமை (EMOTIONAL QUOTIENT)

இவைகள்தான் உங்களை வெற்றிப் பாதையில் கொண்டு செல்லும். தேர்வுகளில் நீங்கள் எடுக்கும் மதிப்பெண்கள் மட்டும் போதாது. நீங்கள் வெறும் அறிவாளியாகவோ, சிறந்த திறமைசாலியாகவோ இருந்தால் மட்டும் போதாது. உங்களுடைய மனப்பான்மையை ஒட்டியே உங்கள் வெற்றிகள் அமையும். சரியான மனப்பான்மை இருந்தால், அறிவையும் திறமையையும் வளர்த்துக்கொள்ளலாம். ஆனால் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள அறிவும் திறமையையும் மட்டும் போதாது. சரியான மனப்பான்மை இருந்தால் ஒரு வெற்றியாளரக, சாதனையாளரக, ஏன், ஒரு சேம்பியனாகக் கூட நம்மை வளர்த்துக் கொள்ள முடியும். நமது மனப்பான்மை நமக்கு ஒரு நல்ல பெர்ஸனாலிடியை கொடுக்கும்.

நமது பெர்ஸனாலிடியை தீர்மானிக்க கூடியவை எவை என்று பார்த்தால்,

முதலில் வருவது  நமது சக்தி. உடல் பலம், மன பலம், ஆன்மீக பலம்

இரண்டாவதாக வருவது நமது அபிப்பிராயங்கள் (BELIEFS). நம்மைப் பற்றி, நமது தகுதிகளைப் பற்றி, நமது  குணங்களைப் பற்றி, நமது பின்னணியைப் பற்றி, நமது குடும்பத்தைப் பற்றி, நமது எதிர்காலத்தைப் பற்றி நாம் கொண்டிருக்கும் அபிப்பிராயங்கள், நமது சுய அபிப்பிராயம், மற்றும் சுய மரியாதை (SELF-ESTEEM)
அடுத்ததாக, நமது பலம், பலவீனம், வாய்ப்புக்கள் மற்றும் சவால்கள் பற்றிய சமமான ஒரு சுய அறிவு.
அடுத்ததாக, நமது உள்-உரையாடல்கள் (INTERNAL COMMUNICATION). நமது மனதில் சதா ஓடிக்கொண்டிருக்கும் எண்ண அலைகள் – முக்கியமாக எதிர்மறையான உள்-உரையாடல்கள், எண்ணங்கள்.

நமது சூழ்நிலை – நாம் பிறந்து வளர்ந்த சூழ்நிலை,  நம்மை சுற்றியிருக்கும் மக்கள்

நமது பழக்க வழக்கங்கள்

நமது ஆழ்ந்த விருப்பங்கள், நமது முயற்சிகள், நமது எதிர்பார்ப்புகள்.

இன்னும் பல.

இவற்றைப் பற்றியெல்லாம் ஒவ்வொரு கட்டுரையிலும் ஒரு சில கருத்துக்களைப் விரிவாக நாம் ஆராய்ந்து சிந்தித்துப் பார்க்கலாம்.
                                                                                   …….. தொடரும்


Thursday, June 17, 2010

Difficulties with Tamil Font in Blogger

I realized that I am wasting my time in trying to write in Tamil in my Blog. I am not able to edit and correct my posts properly and even while I write, the transliteration does not work from time to time. I do not know whether it is worthwhile continuing this Tamil Blog. Can somebody guide me?

ஆரம்பம் - விண்வெளியைப் பற்றிய முதல் பகுதி

இந்த வானம் எப்பொழுதும் இப்படியே இருந்திருக்கிறதா, இதற்கு ஏதேனும் ஒரு ஆரம்பம் உண்டா, எப்படி ஆரம்பமாயிற்று, எப்பொழுது ஆரம்பம் ஆனது, யார் இதை தோற்றுவித்தார் இவை எல்லாமே முக்கியமான கேள்விகள் .


இந்த உலகம் அதாவது இந்த வானம் 14.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக தோன்றியதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ஒரு பில்லியன் என்பது நூறு கோடி. அதாவது இந்த உலகம் தோன்றி 1450 கோடி ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆரம்பமாவதற்கு முன்னால் என்னதாக இருந்தது என்பது இதுவரை அறியப்படவில்லை. பல யூகங்கள். ஒன்றுமில்லாததாக இருந்ததிலிருந்துதான் எல்லாமே வெளிப்பட்டிருக்கிறது. Everything came from Nothing. இதை முழுமையாக விஞ்ஞானிகள் நம்ப மறுக்கிறார்கள்.

நமது இயற்பியலின் விதிகள் (Laws of Physics) எல்லாமே இந்த உலகம் தோன்றிய பின்னே உள்ள நிலைக்குதான் சரியாக வரும். தோன்றுவதற்கு முன்னே கால நேரம், இடைவெளி அல்லது இடம் என்பது கிடையாது. அதாவது உலகம் தோன்றுவதற்கு முன்னால் இந்த வானமும் கிடையாது, நேரம் என்பதும் கிடையாது.

ஒரு குறிப்பிட்ட சமயத்தில், அதாவது 1450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு பெரிய வெடிப்பில் (எதிலிருந்து என்பது இன்னமும் கேள்விதான்) ஏற்பட்டதுதான் இந்த உலகம். இந்த நிகழ்வை Big Bang என்று கூறுகிறார்கள். எதோ ஒன்று வெடித்து சிதறி, துண்டு துண்டாக அங்கங்கே விழுந்த கற்கள்தான் இன்று நாம் காணும் பல்வேறு கோள்கள், நட்சத்திரங்கள், சூரியன்கள், பால் வெளிகள், மற்றும் பல உலகங்கள்.

நமது இந்திய மூதாதையர்கள் இதை தத்துவபூர்ணமாக உணர்ந்திருக்கிறார்கள். "எல்லாமே ஒன்றிலிருந்துதான் தோன்றியிருக்கிறது, தோன்றுவதற்கு முன்னாலேயும் சரி, தோன்றியதற்கு பின்னாலேயும் சரி அது பூரணமாகவே இருந்திருக்கிறது" என்று கூறியிருக்கிறார்கள். தோன்றுவதற்கு முன்னால் இருந்த நிலையை இன்று விஞ்ஞானிகள் Singularity என்று கூறுகிறார்கள். Singularity என்பது என்ன, எப்படி இருந்தது, அதன் தன்மைகள் என்ன என்பது பற்றி ஆராய்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆராய்ச்சி முழுமை அடையும்பொழுது நமது எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிடும்.

இந்த உலகம் தோன்றுவதற்கு முன்னால் எந்த நிலையில் இருந்ததோ அந்த நிலையில் உலகம் தோன்றுவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் அதனுள்ளேயே அடங்கிக் கிடந்திருக்கிறது. Singularity could just have been a field of All Possibilities. இதையேதான் நமது புராணங்களில், "ஆயிரம் தலைகளைக் கொண்டவர், ஆயிரம் கைகளைக் கொண்டவர், முடியாதவர், பிளந்து நிற்பவர், அணுவுக்குள் அணுவாய் இருப்பவர்' என்றெல்லாம் பலவிதமாக அந்த Singularity என்பதைப் பற்றி கூறியிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

இந்த Big Bang ஏற்பட்ட நேரத்தில் பல நூறு கோடி டிகிரி வெட்பம் உண்டாகியிருக்க வேண்டும். அந்த வெட்பத்தில் முதன் முதலில் ஹீலியம் என்ற ஒரு வாயுப் பொருள் மட்டுமே தோன்றி, பிறகு அந்த வெட்பத்தில் ஏற்பட்ட ரசாயன மாற்றத்தில் ஹைட்ரஜன் வாயுவும் உண்டாகியிருக்கிறது. இது உலகம் தோன்றிய நேரத்திலிருந்து ஒரு வினாடிக்கும் மிகக் குறைவான நேரத்தில் ஏற்பட்ட இந்த விளைவு.

வெட்பம் இப்படியாக கூடும் பொழுதும் குறையும் பொழுது ஹீலியம் மற்றும் ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்று சேர்ந்து வேறு பல வாயு, மற்றும் திடப் பொருட்களும் உண்டாகும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது .

அணுக்கள் பிரியும் பொழுதும் கூடும் பொழுதும் பல லட்சக்கணக்கான டிகிரி வெட்பம் உண்டாகும். பிறகு வெட்பம் குறைந்து குளிரத் தொடங்கும். இப்படி மாறி மாறி வெட்பமும் குளிரும் தோன்றும் பொழுது பல பல உலோகங்கள் தோன்றியிருக்கின்றன.

இந்த உலோகங்களின் கூட்டு கலவைதான் இன்று நாம் பார்க்கும் பல கோள்கள்.

Monday, June 14, 2010

விண்வெளி

'ஆகாசம்' அல்லது வானம் எல்லோரையும் பிரமிக்க வைக்கும் பஞ்ச பூதங்களில் ஒன்று. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாசம் இவை பஞ்ச பூதங்களாகும். இந்த பஞ்ச பூதங்களால்தான் எல்லா படைப்பும் ஏற்பட்டிருக்கிறது. 'எல்லையில்லா வானம்' நாம் தோன்றிய காலத்திலிருந்தே நம்மை ஈர்த்திருக்கிறது. இந்த வானத்தில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதில் நாம் ஆரம்ப காலத்திலிருந்தே ஆர்வம் காட்டி வந்திருக்கிறோம். முக்கியமாக நமது நாட்டில் வான சாஸ்திரம் பற்றிய அறிவு மிக பண்டைய காலத்திலிருந்தே வளர்ந்து வந்திருக்கிறது. மேலை நாடுகளில் வானத்தைப் பற்றிய அறிவு, விஞ்ஞான பூர்வமாக வளர்வதற்கு முன்னாலேயே, நமது நாடு வான சாஸ்த்திரத்தில் முன்னேறியிருக்கிறது என்று நான் சில இடங்களில் படித்திருக்கிறேன். அதற்கு பல உதாரணங்களைக் காட்டுகிறார்கள்.இந்த விண்வெளியைப் பற்றிய விஷயங்களைப் படிப்பதற்கு எனக்கு மிகவும் பிடிக்கும். மேலும் மேலும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவலும் எனக்கு உண்டு. வானவியல் என்பதுதான் Astronomy என்பதன் தமிழாக்கம் என்று நினைக்கிறேன். வானவியலை பாடமாக எடுத்து எத்தனை மாணவர்கள் படிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. சில வருடங்களுக்கு முன்னால் லண்டனிலிருந்து டாக்டர் ராபின் சிங் என்பவர் எழுதிய Big Bang என்ற புத்தகத்தைப் படித்து பிரமித்து இருக்கிறேன். இந்த பிரபஞ்சம் எப்படித் தோன்றியிருக்கிறது என்பதை ஒரு சுவையான கதை போல அழகாக எழுதியிருக்கிறார். எல்லா மாணவர்களும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம். மீண்டும் சமீபத்தில் கென்னெத் சீ டேவிஸ் என்பவர் எழுதிய "Don't Know Much About Universe" என்ற புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. விண்வெளியைப் பற்றி நிறைய விஷயங்களை மிக எளிமையாகவும் படிப்பவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் விதமாகவும் எழுதியிருக்கிறார்.இதைப் படித்த பிறகு நாமும் நமது தமிழ்நாட்டின் மாணவர்களுக்காக - முக்கியமாக கிராமத்து மாணவர்களுக்காக - விண்வெளியைப் பற்றி இதைப்போல் எழுதினால் என்ன என்ற எனது எண்ணத்தினால் ஏற்பட்டதுதான் இந்த கட்டுரைத் தொடர். இந்த தொடரில் ஒவ்வொரு வாரமும் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு சில சுவையான தகவல்களைப் படிக்கலாம்.தொடர்ந்து இதை எழுதுவதற்கு வேண்டிய ஊக்கத்தையும் சக்தியையும் தரவேண்டும் என்று பகவானை பிரார்த்தனை செய்கிறேன். படிப்பவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்கிறேன்.

Monday, June 7, 2010

இயற்க்கை குணம்


சமீபத்தில் படித்த ஒரு கதை.

ஒரு பள்ளத்தின் அருகில் சாது ஒருவர் நின்றுகொண்டிருப்பதை ஒரு வழிப்போக்கன் பார்த்தான். அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளும் ஆவலோடு சாதுவின் அருகில் அவன் சென்றான். ஒரு கருந்தேள் அந்த பள்ளத்தை தாண்ட முயற்ச்சிப்பதை அந்த சாது ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார். ஒவ்வொரு முறையும் அந்த கருந்தேள் பள்ளத்தை தாண்டும்பொழுது அங்கே தேங்கியிருந்த தண்ணீரிலும் சகதியிலும் மாட்டிகொண்டு மூழ்கியது. மிக கவனமாக ஒவ்வொரு முறையும் சகதியிலிருந்து சாது அதை வெளியே எடுத்துவிட்டார். அப்படி எடுத்துவிடும்பொழுது அந்த தேள் அவரை கொட்டியது. மீண்டும் தேள் சகதியில் இறங்கியது. சாது அதை எடுத்து விடுகிறார். தேள் மீண்டும் அவரை கொட்டுகிறது. இப்படியே மீண்டும் மீண்டும் தேள் சகதியில் மாட்டிக்கொள்ள, சாது அதை வெளியே எடுத்துவிட, தேள் அவரை கொட்ட, ....இது தொடர்ந்து கொண்டிருந்தது.


வழிப்போக்கனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆச்சரியத்துடன் சாதுவை நோக்கி கேட்டான், " ஐயா, தேள் கொட்டுகிறது என்பதை தெரிந்தும் மீண்டும் மீண்டும் அதை சகதியிலிருந்து எடுத்து விடுகிறீர்களே! தேள் கொட்டுவதில் இருந்து உங்களைக் காத்துக் கொள்ளக்கூடாதா?" என்று.


சாது கூறினார்," இதில் நான் செய்வதற்கு ஒன்றும் இல்லை. கொட்டுவது தேளின் இயற்க்கை குணம். உயிர்களை காப்பது என்னுடைய குணம் . "


நாம் ஏன் நமது இயற்க்கை குணத்தை பிரதிபலிக்காமல் வித்தியாசமாக இருக்கிறோம்? ஒருவரை ஒருவர் பாதுகாத்து காப்பாற்றாமல் மற்றவரை அழிப்பதிலேயே பொதுவாக நமது கவனத்தை செலுத்துகிறோம்? நாம் எங்கே போய் கொண்டிருக்கிறோம்? யோசித்துப் பாருங்கள்.

Sunday, May 16, 2010

உன் எண்ணங்களே உன்னை உருவாக்குகின்றன

"பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே
இருக்குமிடம் எதுவோ, நினைக்குமிடம் பெரிது
போய்வரும் உயரமும் புது புது உலகமும் அவரவர் உள்ளங்களே
நெஞ்சினில் துணிவிருந்தால் நிலவுக்கும் பொய் வரலாம்"
இது 'சாந்தி நிலையம்' என்ற படத்திலிருந்து ஒரு பாடல். கவிஞர் கண்ணதாசன் எழுதியது என்று ஞாபகம்.
(என்னடா! அடிக்கடி பழைய சினிமா பாடல்களையே மேற்கோள் காட்டிக்கொண்டிருகின்றானே என்று நீங்கள் நினைக்கிறீர்கள், சரிதானா!!)
என்ன செய்வது! பல பழைய பாடல்களிருந்து வாழ்க்கைக்கு தேவையான பல உண்மைகளை நாம் கற்றுக் கொள்ளலாம்.
"TAT TVAM ASI" என்று ஸ்ரீ ஆதி சங்கரர் கூறியிருக்கிறார். "அது நீயாகவே இருக்கிறது. அல்லது நீ அதாகவே இருக்கிறாய் " என்று இதற்கு பொருள் கொள்ளலாம். இந்த வாசகத்தை பலவிதமாக புரிந்துகொள்ளலாம்.
நீ எதாக இருக்க விரும்புகிறாயோ அதாகவே நீ ஆகிறாய். அதாவது, உன் எண்ணங்கள் எப்படி போகிறதோ அதாகவே நீ மாறுகிறாய். நினைக்கும் விதத்தை மாற்றினால் நடக்கும் விதத்தை மாற்றலாம்.
நமது எண்ணங்கள்தான் நம்மை உருவாக்குகின்றன. இதைத்தான் கவிஞர் மேலே சொன்ன பாடலில் சொல்லியிருக்கிறார்.
நம்மை சுற்றி, நமது சரித்திரத்தில் நடப்பதை கொஞ்சம் கவனித்து பார்த்தால் இந்த உண்மை புரியும்.
ஒவ்வொரு கஷ்டமான நேரத்திலும் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை நாம் எப்படித் தீர்மானம் செய்கிறோமோ அதுதான் நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது.
எனவே நமது எண்ணங்களை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டியது மிகவும் அவசியம். அது நமது கையில்தான் இருக்கிறது.