Sunday, May 16, 2010

உன் எண்ணங்களே உன்னை உருவாக்குகின்றன

"பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே
இருக்குமிடம் எதுவோ, நினைக்குமிடம் பெரிது
போய்வரும் உயரமும் புது புது உலகமும் அவரவர் உள்ளங்களே
நெஞ்சினில் துணிவிருந்தால் நிலவுக்கும் பொய் வரலாம்"
இது 'சாந்தி நிலையம்' என்ற படத்திலிருந்து ஒரு பாடல். கவிஞர் கண்ணதாசன் எழுதியது என்று ஞாபகம்.
(என்னடா! அடிக்கடி பழைய சினிமா பாடல்களையே மேற்கோள் காட்டிக்கொண்டிருகின்றானே என்று நீங்கள் நினைக்கிறீர்கள், சரிதானா!!)
என்ன செய்வது! பல பழைய பாடல்களிருந்து வாழ்க்கைக்கு தேவையான பல உண்மைகளை நாம் கற்றுக் கொள்ளலாம்.
"TAT TVAM ASI" என்று ஸ்ரீ ஆதி சங்கரர் கூறியிருக்கிறார். "அது நீயாகவே இருக்கிறது. அல்லது நீ அதாகவே இருக்கிறாய் " என்று இதற்கு பொருள் கொள்ளலாம். இந்த வாசகத்தை பலவிதமாக புரிந்துகொள்ளலாம்.
நீ எதாக இருக்க விரும்புகிறாயோ அதாகவே நீ ஆகிறாய். அதாவது, உன் எண்ணங்கள் எப்படி போகிறதோ அதாகவே நீ மாறுகிறாய். நினைக்கும் விதத்தை மாற்றினால் நடக்கும் விதத்தை மாற்றலாம்.
நமது எண்ணங்கள்தான் நம்மை உருவாக்குகின்றன. இதைத்தான் கவிஞர் மேலே சொன்ன பாடலில் சொல்லியிருக்கிறார்.
நம்மை சுற்றி, நமது சரித்திரத்தில் நடப்பதை கொஞ்சம் கவனித்து பார்த்தால் இந்த உண்மை புரியும்.
ஒவ்வொரு கஷ்டமான நேரத்திலும் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை நாம் எப்படித் தீர்மானம் செய்கிறோமோ அதுதான் நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது.
எனவே நமது எண்ணங்களை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டியது மிகவும் அவசியம். அது நமது கையில்தான் இருக்கிறது.

Saturday, May 15, 2010

சர்தார்ஜி ஜோக்ஸ்

ஐரோப்பா சுற்றி விட்டு நாடு திரும்பிய சர்தார்ஜி தன் மனைவியிடம் கேட்டார்: "என்னைப் பார்த்தால் ஒரு வெளி நாட்டுக்காரர் போலவா தெரிகிறது?"
"இல்லையே!" என்றார் மனைவி.
"பின்னே எப்படி, லண்டனில் என்னைப் பார்த்து ஒரு பெண்மணி 'உங்களைப் பார்த்தால் வெளிநாட்டுக்காரர் போலத் தெரிகிறதே' என்றாளே?"
********
பஞ்சாப் வந்திருந்த அமெரிக்கர் ஒருவர் சர்தார்ஜியிடம் கேட்டார்: "இந்த ஊரில் பெரிய மனிதர்கள் யாரேனும் பிறந்திருக்கிறார்களா?"
"இல்லையே, இங்கே சின்னக் குழந்தைகள்தானே பிறந்திருக்கின்றன!!!" என்றார் சர்தார்ஜி.
*******
எனக்கு கிடைத்த சர்தார்ஜி ஜோக்குகளில் மென்மையானவை என்ற இரண்டை மேலே கொடுத்திருக்கிறேன். பெரும்பாலும் பல நேரங்களில் சர்தார்ஜி ஜோக்குகளை நமக்குள் பகிர்ந்துகொண்டு சிரித்திருக்கிறோம். அவர்களை சில நேரங்களில் கேலியும் செய்திருக்கிறோம். சர்தார்ஜிகளே கூட அவர்களைப் பற்றிய ஜோக்குகளை ரசித்திருக்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்னாள் எதோ ஒரு பத்திரிகையில் படித்த ஞாபகம். ஒரு கணவன் மனைவி வடக்கே எங்கேயோ டாக்சியில் போய்க்கொண்டிருந்தபோது தங்களுக்குள் தமிழில் பல சர்தார்ஜி ஜோக்குகளை சொல்லி சிரித்துக்கொண்டிருந்தனராம். இவ்வளவுக்கும் வண்டியை ஓட்டியவர் சர்தார் என்பதையும் மறந்து சிரித்திருக்கின்றனர். அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்ததும், சர்தார்ஜி டிரைவர் இவர்களை பார்த்து சொன்னாராம்: "நீங்கள் சொல்லிக்கொண்ட பல
ஜோக்குகளை நானும் ரொம்பவும் ரசித்தேன். நன்றாக இருந்தது. எனக்கு ஒரு சிறிய உதவி பண்ணுங்கள். இதோ ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை நான் உங்களுக்கு தருகிறேன். நீங்கள் பல இடங்களுக்கு ஊர் சுற்ற போகிறீர்கள் என்று நினைக்கிறேன். எங்கேனும் ஒரு சர்தார்ஜி பிச்சைக்காரரைப் பார்த்தால் இந்த ஒரு ரூபாயை அவருக்குக் கொடுத்து விடுங்கள்." என்று.
அந்த கணவன் மனைவி பல இடங்களுக்கு வட
இந்தியாவில் சுற்றிவிட்டு ஊர் திரும்பியிருக்கிறார்கள். ஆனால் அந்த ஒரு ரூபாயை எவ்வளவு தேடியும் ஒரு சர்தார் பிச்சைக்காரரிடம் கொடுக்க முடியவில்ல. அவர்கள் கண்களில் ஒரு சர்தார் பிச்சைக்காரர் கூட அகப்படவில்லை.
பல வருடங்களுக்கு பிறகும் அந்த ஒரு ரூபாய் நாணயத்தை பாதுகாத்து வருவதாக எழுதியிருந்தார்கள். அவர்கள் கண்களில் இன்னும் ஒரு சர்தார்ஜி பிச்சைக்காரர் கூட அகப்படவில்லை.
சர்தார்ஜிகளைப் பற்றி அவர்கள் ஜோக்குகள் சொல்லி சிரித்துக்கொண்டதைப் பற்றி மிகவும் வருத்தப்பட்டு எழுதியிருந்தார்கள். சர்தார்ஜிகள் மானஸ்தர்கள். பிச்சை எடுப்பதைவிட எதோ ஒரு தொழிலைப் செய்துகொண்டு மானத்தோடு வாழ்பவர்கள்.
*******
நமது தமிழ்நாட்டில் எல்லா ஊர்களிலும் எங்கு பார்த்தாலும் பிச்சைக்காரர்களைப் பார்க்கலாம். நமக்கு மட்டும் ஏன் இந்த ஈனப் பிழைப்பு? நமக்கும் தன் மானம் இருக்கிறதுதானே?


Sunday, May 9, 2010

உன்னை அறிந்தால் ....

"உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காது
நீ வாழலாம்."

இது ஒரு பழைய எம்.ஜி. ஆர் படப்பாடல் . எழுதியவர் யார் என்பது இப்ப்பொழுது எனக்கு மறந்து விட்டது. 'வேட்டைக்காரன் ' படம் என்று ஞாபகம் . இப்பொழுதும் பழைய எம்.ஜி.ஆர் படப் பாடல்கள் கேட்க எனக்கு மிகவும் பிடிக்கும். பாடல்கள் மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும். கேட்பதற்கும் இனிமையாக இருக்கும்.

"உன்னையே நீ எண்ணிப்பார்." என்பது ஒரு பழைய படத்தின் வசனம். 'சாக்ரட்டீஸ்' கதையை நாடகமாகக் காட்டும் ஒரு காட்சியில் தோன்றும் வசனம். உன்னையே நீ உணர்ந்து கொள்ளவேண்டும் என்பது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே மனிதனுக்குத் தோன்றிய எண்ணம்.

உன்னை நீ அறிந்துகொள்வது என்பது மிகவும் முக்கியம்.

'நான் யார் நான் யார் நான் யார் ' என்பது இன்னொரு எம்.ஜி.ஆர் பட பாடல் . 'நான் என்பது யார்?' என்பது ஒரு முக்கியமான கேள்வி. 'நான்' என்பது என்னுடைய உடம்பா, இந்த மனமா, எனது மூளையா, எனது எண்ணங்களா?

இதைப்பற்றி நாம் தீவிரமாக யோசிக்க வேண்டும். ஏனென்றால் 'நான் யார்' என்பதை தெரிந்து கொள்ளாததினால் தான் இன்று நமக்கு பல பிரச்சினைகள்.
இதைப்பற்றி நாம் மீண்டும் சந்திக்கும்பொழுது விவரமாகப் பேசலாம்.

அறிமுகம்

இந்த வலையில் நான் எழுதப்போகும் எல்லாமே என் வாழ்க்கையில் அனுபவ பூர்வமாக கற்றுக் கொண்டவையாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய அவா. ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது பழமொழி. தகவல்கள் படிப்பப்பதற்கு சுவையாக இருந்தாலும் அதையே அனுபவ பூர்வமாக தெரிந்து கொள்ளும்பொழுது நமக்கு அதிக பலன் கிடைக்கிறது என்பது என்னுடைய நம்பிக்கை. ஆங்கிலத்தில் "Knowledge may become useless until it becomes your Experience" என்று கூறுவார்கள்.
இரண்டாவதாக நமக்கு ஏற்படும் அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்பொழுது அது மற்றவர்களுக்கும் பயன் உள்ளதாக ஆகிறது. ஆனால், "கடை விரித்தேன் கொள்வாரில்லை" என்று ஒரு பழைய ஞானி பாடியதுபோல் பல நேரங்களில் நாம் சொல்வதை கேட்டுக்கொள்வதற்கு எவரும் இல்லை எனும்பொழுது கொஞ்சம் மனச்சோர்வாகதான் இருக்கும். அதைப் பற்றி கவலைப் பட்டால் எதுவுமே சொல்ல முடியாமல் போய்விடும். அதனால் சொல்ல வந்ததை சொல்லிவிடுவோம். எடுத்துக்கொள்பவர்கள் எடுத்துக்கொள்ளட்டும் என்ற துணிச்சலுடன் இதை ஆரம்பம் செய்து வைக்கிறேன். எவ்வளவு சுவையாக, எளிமையாக எழுத முடியுமோ அவ்வளவு முயற்சி செய்கிறேன்.
அதற்காக இதை ஒரு வகுப்பறையாக மாற்றும் எண்ணம் எனக்கில்லை. அதனால் பொழுதுபோக்கு அம்சங்களும் அவ்வப்பொழுது இங்கே காணலாம். இந்த முன்னுரையோடு இந்த வலையில் எழுதத் தொடங்குகிறேன். தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களையும் எனக்குத் தெரிவிக்கவும். உங்கள் கருத்துக்களுக்கு உரிய மதிப்பு கொடுத்து வருவேன்.

Tuesday, May 4, 2010

மாணவர் சமுதாயத்திற்காக நான் என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி யோசித்துப் பார்த்ததில் பிறந்த கருத்துக்களில் ஒன்றுதான் இந்த வலைப்பிரிவு. இதில் எனக்குத் தெரிந்த விஷயங்களையும் எனக்குக் கிடைத்த தகவல்களையும் மாணவர்களுடன் எவ்வளவு சுவையாக பகிர்ந்து கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு முயற்சி செய்கிறேன். குறைகள் இருந்தால் பொறுத்துக்கொள்ளவும். எனது தமிழில் குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டவும். திருத்திக்கொள்ள முயல்கிறேன். "திருத்தல்' என்ற பெயரில் ஆங்கிலத்தில் இன்னொரு வலைப்பிரிவும் எனக்கு உண்டு. எனது முயற்சி வெற்றி பெற எல்லாம் வல்ல பகவானைப் பிரார்த்திக்கிறேன்.