Sunday, March 30, 2014

பெர்ஸனாலிடியை வளர்த்துக்கொள்வது எப்படி? பகுதி 1: வலிமையைப் பற்றி


மாணவர் உலகம் என்ற மாதப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட நான் எழுதிய கட்டுரைத் தொடரின் முதல் பகுதி


நமது அறிமுகப் பகுதியில் பெர்ஸனாலிடியை தீர்மானிப்பவை எவை என்பதில், நமது உடல் மற்றும் மன வலிமை முதலாவதாக வருவதாகப் பார்த்தோம். இந்தப் பகுதியில் இதைப் பற்றி மேலும் சிறிது ஆராய்ந்து பார்க்கலாம்.

“ஒடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா” - பாரதியார்

சில கசப்பான உண்மைகளை நாம் ஒத்துக்கொண்டே ஆக வேண்டும். இன்றைக்கு பல சிறுவர்களுக்கு சிறு வயதிலிருந்தே பலவிதமான வியாதிகள் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அஜீரணம், தலைவலி, பல்வலி, மூச்சு முட்டல், பார்வைக் கோளாறு, இருதயக் கோளாறு, சர்க்கரை நோய், உடல் களைப்பு, தூக்கமின்மை போன்ற பல உடல்நலக் கோளாறுகள் தங்கள் குழந்தைகளுக்கு இருப்பதாக பல பெற்றோர்கள் குறைபட்டுக்கொள்கிறார்கள். இது போதாதென்று, சிறுவர்களுக்கு இன்றைக்கு இருக்கிற மன அழுத்தங்கள் (MENTAL PRESSURES) சொல்லி மாளாது. நான்கு ஐந்து வயதிலிருந்தே தினம் தினம் போட்டிகளை (COMPETITION) சந்திக்க வேண்டிய சூழ்நிலை. மதிப்பெண்கள் வாங்குவதிலிருந்து தொடங்கி எதெற்கெடுத்தாலும் ஒரு போட்டி, சிறு வயதிலிருந்தே போட்டியில் எப்படியும் தங்கள் குழந்தைகள் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்கிற ஒரு வெறித்தத்தனத்தோடு பல பெற்றோர்கள் தவிக்கிறார்கள். வெற்றி பெற முடியாத பல குழந்தைகள் ‘இது நம்மால் ஆகாது’ என்கிற ஒரு தோல்வி, தாழ்வு மனப்பான்மையோடேயே வளர்கிறார்கள். எதெற்கெடுத்தாலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். இது இந்த சமுதாயத்தின் ஒரு மிகப் பெரிய வியாதி.

இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னால், எங்கள் தெருவில் வசிக்கும் ஒரு பெண்மணி என்னிடம் வந்து தன்னுடைய பெண்ணுக்கு மாலை நேரம் டியூஷன் எடுக்க முடியுமா என்று கேட்டாள். அதற்கு அவர்கள் கூறிய காரணம், தன் பெண் இரண்டாம் ரேங்கிலிருந்து மூன்றாம் ரேங்கிற்கு கீழிறங்கிப்போய் விட்டாளாம். ‘உங்கள் பெண் எந்த வகுப்பில் படிக்கிறாள்’ என்று கேட்டதற்கு முதல் வகுப்பு என்று பதில் கூறினாள். எனக்கு சிரிப்பாக இருந்தது. கோபமும் வந்தது. ‘என்னம்மா, முதல் வகுப்புக்கு என்ன ரேங்க் வேண்டிக்கிடக்கிறது? உங்கள் பெண்ணை மாலை நேரம் நன்றாக தெருவில் ஓடியாடி விளையாடச் சொல்லுங்கள். அதைத்தான் நான் என் சிறு வயதில் செய்திருக்கிறேன். நான் இன்று நன்றாக இல்லையா? இந்த வயதில், கிடைக்கிற சிறு நேரத்திலும் டியூஷன் வகுப்புகளுக்கு அனுப்பி அந்த குழந்தையின் பொன்னான பருவத்தை வீணடிக்காதீர்கள், என்று சொல்லி அனுப்பிவைத்தேன். இப்படி இருக்கிறது நமது சிறு குழந்தைகளின் கதை.

இன்று நமது சிறுவர்களுக்கு இருக்கும் பல அழுத்தங்களுக்கு பெற்றோர்களே காரணம் என்றுதான் கூறவேண்டும். இப்படி நான் சொல்வதற்காக பெற்றோர்கள் என்மீது கோபப்படலாம். தங்கள் குழந்தைகள் நன்றாக படிக்கவேண்டும் என்று பெற்றோர்கள் ஆதங்கப்படுவதை, ஆசைப்படுவதை யாரும் குறைகூற முடியாதுதான். ரேங்க் என்பது ஒருவரை அங்கீகரிப்பதற்கும், ஊக்குவிப்பதற்கும் ஏற்படுத்தப்பட்ட ஒரு கருவி என்றுதான் நான் நம்புகிறேன். வெறும் போட்டி மனப்பான்மையை வளர்ப்பதற்காக அல்ல. இன்று பெரும்பாலான மாணவர்களுக்கு, மாலை நேர விளையாட்டு என்பது என்னவென்றே தெரியாமல் போய்விட்டது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் கம்ப்யூட்டர் விளையாட்டும், வீடியோ விளையாட்டும்தான். வெகு சீக்கிரம் விரல்கள் உணர்ச்சியற்றுப்போய்  அவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி வந்துவிடும். முக்கியமாக, பெண் குழந்தைகளுக்கு விளையாட்டு என்பதே இல்லை. பழைய காலங்களில் வீட்டு வேலைகளையாவது பெண் குழந்தைகள் செய்துகொண்டிருந்தார்கள். இன்று அதுவும் இல்லை. அவர்கள் படிப்பு கெட்டுப்போய்விடும் என்று சொல்லி அவர்களிடம் பெற்றோர்கள் வீட்டு வேலை வாங்குவதேயில்லை. அரசாங்கமே மிக்சி, கிரைண்டர் எல்லாம் இலவசமாக கொடுத்துவிடுகிறது. உடல் தேய்ந்து உரல், ஆட்டுக்கல்லை பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விட்டது. இடுப்பு வலிக்க தண்ணீர் குடம் சுமக்க வேண்டியதில்லை. வெகு சாதாரணமான ஸ்கிப்பிங் கயிறுகூட காணாமல் போய்விட்டது. ஆனால், பல குழந்தைகளிடமும் செல் ஃபோன் மட்டும் இருக்கிறது.

பல குழந்தைகளுக்கு, வசதியிருந்தும்கூட, சத்துள்ள உணவு கிடைப்பதில்லை. தொலைக்காட்சியில் வரும் பல விளம்பரங்களே நமது குழந்தைகளைக் கெடுக்க போதுமானது. எப்போதோ, தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம் பார்த்த ஞாபகம். ஒரு சிறு குடும்பத்தில் அம்மா பல சுவையான, வண்ண வண்ண உணவு வகைகளை தயாரித்து சாப்பாட்டு மேஜையில் வைக்கிறாள். சாப்பிட உட்கார்ந்திருக்கும் எல்லோருக்கும் மகிழ்ச்சி, ஒரு சிறு பெண்ணைத் தவிர. அந்தப் பெண் மிகச் சோர்வாக, வருத்தமாகக் காணப்படுகிறாள். உடனே, அந்த அம்மாவுக்கு புரிந்து விடுகிறது. ‘உனக்கு என்ன வேண்டும் என்று எனக்குத் தெரியும்’ என்று சொல்லி ஒரு சிறிய தட்டில் ஒரு பிரபலமான கம்பெனி தயாரிப்பில் வந்த ஒரு சாக்கலேட் கட்டியை கொண்டுவந்து வைக்கிறாள். உடனே அந்த சிறிய பெண்ணின் முகம் மிக பிரகாசமாகிறது. விளம்பரக்காரர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.

ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியின் முதல்வர், ‘பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல சத்துள்ள காய்கறிகள், பழங்கள், உணவுகளை மதிய உணவுக்கு கொடுத்தனுப்புவது இல்லை’ என்று  என்னிடம் குறை கூறிக்கொண்டிருந்தார். என்ன செய்வது, சத்தில்லாத, விளம்பரபடுத்தப்படும் சில உணவுகளையே பல சிறுவர்கள் விரும்புவதாக பெற்றோர்களும் குறைபட்டுக் கொள்கிறார்கள். இயற்கையாக கிடைக்கக்கூடிய பல சத்துள்ள உணவு வகைகளை குழந்தைகள் தொடுவதேயில்லை.

பல வியாதிகளுக்கு, நமது சுற்றுப்புற சூழ்நிலையே காரணமாக அமைந்துவிடுகிறது. அதைக் கட்டுப்படுத்தக்கூடிய வலிமை நம்மிடம் இல்லைதான். குறைந்தபட்சம், நமது கட்டுக்குள் இருப்பதையாவது நாம் சரி செய்யலாமே.

விளையாட்டு, உடற்பயிற்ச்சி, சரியான நேரத்தில் சத்தான உணவு இவைதான் நமது உடல் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கின்றன. உடல் ஆரோக்கியம் நமது அடிப்படை பெர்ஸனாலிடியை தீர்மானிக்கிறது. உடலில் வலிமை இல்லை என்றால், மனதும் சோர்ந்துபோயிருக்கும். சோர்ந்து போயிருப்பவரின் மனப்பான்மையும் அப்படியே சோர்ந்தே இருக்கும். இதை தினப்படி நீங்களே உங்கள் மத்தியில் உள்ள பல மாணவர்களிடம் காணலாம்.

அதனால், மாணவர்களே, உங்கள் பெர்ஸனாலிடியை வளர்த்துக்கொள்ள நீங்கள் முதலில் என்ன செய்ய வேண்டும்?

1.                                 நல்ல பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.2    
  .   
த          தினமும் உடற்பயிற்ச்சி, உடலை வருத்தி விளையாடும் விளையாட்டுக்கள், யோகா, மூச்சுப் பயிற்ச்சி முதலியவற்றை கடைபிடியுங்கள். மாலை நேரத்தில் வெட்டவெளியில் விளையாடுவது மிகவும் முக்கியமானது. உடலுக்கு தேவையான மிக முக்கியமான வைட்டமின் டீ சூரியவெளிச்சத்தில் இலவசமாக கிடைக்கின்றது. நன்றாக உடற்பயிற்ச்சி செய்யும்பொழுது உணவை ஜீரணம் செய்யும் உடம்பின் பகுதிகள் நன்றாக வேலை செய்யும். நுரையீரல், இருதயம் நன்றாக வேலை செய்து ரத்த ஓட்டம் சீராகும். நன்றாக பசியெடுக்கும். எலும்பு, நரம்பு பலமடையும்.  நன்றாக தூக்கம் வரும். இப்படி பல நன்மைகள் இருக்கின்றன.
3.   நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள். சரியான நேரத்தில் சாப்பிடுங்கள். சரியான அளவு சாப்பிடுங்கள். விளம்பரப்படுத்தும் பல சத்தில்லாத உணவு வகைகளை சாப்பிடுவதை, தவிர்க்க முடியாவிட்டால், குறைந்தபட்சம் குறைத்துக்கொள்ளுங்கள்.
4.  
          தொலைக்காட்சி பார்ப்பது, வீடியோ கம்ப்யூட்டர் விளையாட்டுக்களை விளையாடுவது போன்றவை உங்களது மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவாது. கண்டிப்பாக தூங்கப்போவதற்கு முன்பு தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்க்கவும். தவிர்க்க முடியாவிட்டாலும் குறைத்துக்கொள்ளுங்கள்.
5.   
           பெற்றோர்களே, உங்களுக்கு ஒரு முக்கியமான வேண்டுகோள். பெரும்பாலும், நீங்கள் எல்லோரும் கடுமையாக குடும்பத்திற்காக, முக்கியமாக உங்கள் குழந்தைகளுக்காக, உழைக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஊடவே, உங்கள் குழந்தைகளுடன் உங்கள் தரமான நேரத்தை (QUALITY TIME) ஒதுக்குங்கள். மிக அதிகமான எதிர்பார்ப்புகளை உங்கள் குழந்தைகளின் மீது திணிக்காதீர்கள். இது அவர்களின் மன அழுத்தத்தைக் கூட்டும். பல வியாதிகளுக்கு காரணமாகும். சிறுவர்கள் மிகவும் மென்மையானவர்கள், வளைந்து கொடுப்பவர்கள், பலவீனமானவர்களும் கூட. அவர்களை உருவாக்குவதில் உங்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உண்டு என்பது உங்களுக்கே தெரியும். உங்களுடைய சொந்த பிரச்சினைகளுக்காக இந்தப் பொறுப்பை மறந்து விடாதீர்கள். அவர்கள் எதை செய்யக்கூடாது என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அதை நீங்களும் செய்யாதிருப்பது உங்கள் குழந்தைகளுக்கு நல்லது. நீங்கள் அவர்களுக்கு ஒரு முன்னோடி. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதையும் உங்கள் குழந்தைகள் மிகக் கூர்மையாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மனதில் கொள்ளவும். முக்கியமாக மற்ற குழந்தைகளுடன் உங்கள் குழந்தைகளை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள், பேசாதீர்கள். ஒவ்வொரு குழந்தையும் ஒரு தனித்தன்மை வாய்ந்த குழந்தை என்பதை மறந்து விடாதீர்கள்.

     என்னடா, வலிமையைப் பற்றி பேசும் பொழுது உடல் வலிமையைப் பற்றி மட்டுமே இவர் சொல்லியிருக்கிறாரே, மன வலிமையைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே என்று நினைக்கிறீர்களா? ஆம். காரணமாகத்தான். உடல் வலிமைதான் ஆதாரம். உடல் வலிமையில்லாமல் மன வலிமை என்பது மிக அரிது. மனதில் தோன்றும் பல பிரச்சினைகளுக்கு உடல் உபாதையே காரணம். தைரியம், தன்னம்பிக்கை, கொள்கையில் உறுதி, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொள்ளல் போன்ற மனவலிமைக்கு அடையாளங்கள் நமது பெர்ஸனாலிடியின் பிரதிபலிப்புகள். வரும் பகுதிகளில் அவற்றைப் பற்றியும் பேசுவோம்.

        ஒன்றை மட்டும் நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். உடம்பு, மனது இரண்டும் வலிமையாக இருக்க வேண்டும். மனது தளர்ந்தால் அது உடல் உபாதையாக மாறும். உடம்பு தளர்ந்தால் அதுவும் மனோவியாதியில் கொண்டு சேர்க்கும். உடம்புக்கு எவ்வளவு ஆரோக்கியமான பயிற்சிகள் தேவையோ, அவ்வளவு மனதுக்கும் தேவை.
-    தொடரும்


No comments:

Post a Comment