'ஆகாசம்' அல்லது வானம் எல்லோரையும் பிரமிக்க வைக்கும் பஞ்ச பூதங்களில் ஒன்று. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாசம் இவை பஞ்ச பூதங்களாகும். இந்த பஞ்ச பூதங்களால்தான் எல்லா படைப்பும் ஏற்பட்டிருக்கிறது. 'எல்லையில்லா வானம்' நாம் தோன்றிய காலத்திலிருந்தே நம்மை ஈர்த்திருக்கிறது. இந்த வானத்தில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதில் நாம் ஆரம்ப காலத்திலிருந்தே ஆர்வம் காட்டி வந்திருக்கிறோம். முக்கியமாக நமது நாட்டில் வான சாஸ்திரம் பற்றிய அறிவு மிக பண்டைய காலத்திலிருந்தே வளர்ந்து வந்திருக்கிறது. மேலை நாடுகளில் வானத்தைப் பற்றிய அறிவு, விஞ்ஞான பூர்வமாக வளர்வதற்கு முன்னாலேயே, நமது நாடு வான சாஸ்த்திரத்தில் முன்னேறியிருக்கிறது என்று நான் சில இடங்களில் படித்திருக்கிறேன். அதற்கு பல உதாரணங்களைக் காட்டுகிறார்கள்.
இந்த விண்வெளியைப் பற்றிய விஷயங்களைப் படிப்பதற்கு எனக்கு மிகவும் பிடிக்கும். மேலும் மேலும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவலும் எனக்கு உண்டு. வானவியல் என்பதுதான் Astronomy என்பதன் தமிழாக்கம் என்று நினைக்கிறேன். வானவியலை பாடமாக எடுத்து எத்தனை மாணவர்கள் படிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. சில வருடங்களுக்கு முன்னால் லண்டனிலிருந்து டாக்டர் ராபின் சிங் என்பவர் எழுதிய Big Bang என்ற புத்தகத்தைப் படித்து பிரமித்து இருக்கிறேன். இந்த பிரபஞ்சம் எப்படித் தோன்றியிருக்கிறது என்பதை ஒரு சுவையான கதை போல அழகாக எழுதியிருக்கிறார். எல்லா மாணவர்களும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம். மீண்டும் சமீபத்தில் கென்னெத் சீ டேவிஸ் என்பவர் எழுதிய "Don't Know Much About Universe" என்ற புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. விண்வெளியைப் பற்றி நிறைய விஷயங்களை மிக எளிமையாகவும் படிப்பவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் விதமாகவும் எழுதியிருக்கிறார்.
இதைப் படித்த பிறகு நாமும் நமது தமிழ்நாட்டின் மாணவர்களுக்காக - முக்கியமாக கிராமத்து மாணவர்களுக்காக - விண்வெளியைப் பற்றி இதைப்போல் எழுதினால் என்ன என்ற எனது எண்ணத்தினால் ஏற்பட்டதுதான் இந்த கட்டுரைத் தொடர். இந்த தொடரில் ஒவ்வொரு வாரமும் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு சில சுவையான தகவல்களைப் படிக்கலாம்.
தொடர்ந்து இதை எழுதுவதற்கு வேண்டிய ஊக்கத்தையும் சக்தியையும் தரவேண்டும் என்று பகவானை பிரார்த்தனை செய்கிறேன். படிப்பவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்கிறேன்.
No comments:
Post a Comment